இந்தியாவுக்கு ‘நம்பர்–1’ இடமா | ஜனவரி 17, 2023

தினமலர்  தினமலர்
இந்தியாவுக்கு ‘நம்பர்–1’ இடமா | ஜனவரி 17, 2023

துபாய்:  டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி ‘நம்பர்–1’ இடம் பெற்றதாக ஐ.சி.சி., தவறாக செய்தி வெளியிட, குழப்பம் ஏற்பட்டது. 

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.,) டெஸ்ட் தரவரிசையில் ஆஸ்திரேலியா (126 புள்ளி), இந்தியா (115), இங்கிலாந்து (107), தென் ஆப்ரிக்கா (102) அணிகள் ‘டாப்–4’ இடத்தில் உள்ளன. நேற்று மதியம் ஐ.சி.சி., இணையதளத்தில் திடீரென இந்தியா 115 புள்ளிகளுடன் ‘நம்பர்–1’ இடம், ஆஸ்திரேலியா (111) இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. 

இதனால் ‘டி–20’ தரவரிசையில் ‘நம்பர்–1’ ஆக உள்ள இந்தியா, அடுத்து நியூசிலாந்து ஒருநாள் தொடரில் சாதித்தால், மூன்று வித கிரிக்கெட்டிலும் ‘நம்பர்–1’ அணி ஆக வாய்ப்பு இருந்தது. இரண்டு மணி நேரத்தில் திருத்தம் செய்த ஐ.சி.சி., ஏற்கனவே இருந்த டெஸ்ட் தரவரிசை பட்டியலை வெளியிட, ரசிகர்கள் குழப்பம் அடைந்தனர். ஐ.சி.சி., இணையதளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்னை காரணமாக, தவறாக செய்தி வெளியானதாம்.  

வாய்ப்பு எப்படி

இருப்பினும் டெஸ்டில் இந்தியா ‘நம்பர்–1’ இடம் பெற வாய்ப்பு உள்ளது. விரைவில் இந்தியா வரவுள்ள ஆஸ்திரேலிய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (பிப். 9–மார்ச் 13) பங்கேற்க உள்ளது. இதில் இந்தியா 2–0 என வென்றால், 121 புள்ளிகளுடன் டெஸ்ட் அரங்கிலும் ‘நம்பர்–1’ இடம் பிடிக்கலாம். 

மூலக்கதை